முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திறமை தான் நமக்கு செல்வம்


 Image by LuAnn Hunt from Pixabay

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள்.

செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம்.

ஏன் இந்த வேறுபாடு?

முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர்.

அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர்.

ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான்.

பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார்.

அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான்.

இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்து கொண்டிருக்கிறார் என்றும் விலா வாரியாக எடுத்து கூறினான்.

பணக்காரன் குறைபட்டுக் கொண்டவனை பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிக சம்பளம் பெரும் காரணம் என்றார் சிரித்தபடி.

சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும் தான், ஆனால் அதற்கும் மேல் அதிகப் படி சிந்தித்து அழகாக செய்வது என்பது, திறமையான வேலை.

ஊரில் எத்தனையோ மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லாரும் போய் மொய்த்துக்  கொள்கிறார்களே, ஏன்?

ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.

திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழி விட்டு நிற்கிறது.

வெட்டி வா என்றால் கட்டிக் கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோடையே போடுபவர்கள், என்று இப்படிப்பட்டவர்களுக்கு தான் என்றும் எங்கும், மவுசும் மரியாதையும் இருக்கும்.

வெறும் இச்சை மற்றும் இருந்தாலே அது திறமை ஆகி விடாது. மூச்சடக்கிக் காட்டினால் தான் 'முனி' என்று ஏற்று கொள்வார்கள்.

திறமைசாலி ஒரு போதும் பொருட்களை வீணாக்க மாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.

மனதை அலைபாய விடாமல், செய்யும் செயல்களில் ஒரு நிலைப்படுத்தி, தன்னை கட்டுப்படுத்தி, புறச் சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர் பார்த்த முடிவுகளை தரக் கூடியவன் தான் திறமைசாலி.

வெறுமே 'மாங்கு மாங்கென்று', செக்கு மாடு போல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறைமையாகி விடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப் பிடிப்பது தான் திறமையாகும்.

கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.

இருக்கும் திறமையை சரிவர பயன்படுத்தாமல், "குடத்தில் இட்ட விளக்காக" இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப் பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.

சோதனைக் களங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள்.

எதிலும் முழுமையை எதிர் பார்ப்பது, எதையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக் கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது.

திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும் , நம்மால் நிச்சயம் அடைய முடியும்.

நேரத்தை முறையாக திட்டமிட்டு, பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.

ஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள் தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத் துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்த துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்?

எனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் பட வேண்டும். பொருத்தமான செயல் முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் வேண்டும்.

மேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப் படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்!                                                                          


                                                                                                                                                                   -  ச.வெங்கடேஷ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....

மொழிபெயர்ப்பு: Titanic -My heart will go on

  ௨னைத்   தொடுதலில்   உனைக்   கண்   தேடுதலில்   இடையறாது   நீள்கிறதென்   கனவுகள்   தொலைதூரத்   தேடுதலும்   இல்லை   இடைவெளிகளில்   நீ   தொலைந்ததும்   இல்லை   என்   இராக்கனவுகளில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   மீண்டும்   ௭ன்   இதயக்   கதவுகளைத்   திறந்திட்டாய் - ௮து   யாண்டும்   உன்   குடிலென   புகுந்திட்டாய்   நினைவருகில் ,   யாக்கைத்   தொலைவில் -   ௭ங்கிருப்பினும்   என்   இதயக்   காவலில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   தீண்டிச்   சென்றதோ   காதல்   ஒருமுறை -   தடை   தாண்டி   வளர்கிறது   நம்   சாதல்   வரை நான்   பாசமுற்ற   கணங்களோ   காதலென்பது -   நீ   நேசமேற்ற   நொடிகளில்   ௭ன்   வாழ்வு   ...