Image by Mahinthan So - சொந்த முயற்சி
வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள்.
அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே.
"கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்."
"அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி.
"அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி.
திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. முருகன் தேர், பின்னால் குட்டி கணபதி தேர் என வரிசையாக அலங்காரமாய் வண்ணமயமாக புறப்படும் நிலையில் தேர்கள் தயாராக இருந்தன.
தெருவெல்லாம் திடீர் கடைகள் முளைத்திருந்தன. பாத்திரக்கடை முதல் பேன்சி சவுரிக் கடைகள் வரை நடக்கக் கூட இடமின்றி அந்த பிரதேசமே முழுக்க வியாபித்து இருந்தன. பாம்பு உடல் பெண், மாஜிக் ஷோ, கரடி வித்தை, கம்ப்யூட்டர் ஜோசியம், ரிங் விளையாட்டு என அனைத்து திருவிழா அம்சங்களுக்கும் குறைவில்லை. வர்ண பலூன்களும், விசிறிகளும் கண்களைக் கவர்ந்தன.
நாதஸ்வரம் தவில் ஓசையுடன் கோவில் வழிபாடு ஒரு புறம் நடக்க, வெடிகள் அதிரடியாய் வானில் வெடித்துச் சிதறி வண்ண பூக்களை வாரியிரைத்தன.
ஜெண்டையும், பம்பையும் முழங்க மக்கள் கூட்டம் தேரினை இழுக்க முண்டியடித்து வரிசை பிடித்து 'ஹரஹர சிவ சிவ' என்று விண்ணதிர முழக்கமிட்டு ஆர்ப்பரித்து நின்றார்கள்.
முப்பது வருடங்களாக தேர்க் கட்டை போடும் கலையில் தேர்ந்தவனான சுப்புணி கடமையில் மும்மரமாக இருந்தான்.
கடகடவென தேர் ஓடத்தொடங்கியது. 'ஹோ ஹோ 'வென மக்களின் ஆரவாரம்.
'சிவ சிவா' வென்று விண்ணதிரே முழக்கம். பரபரப்பு கூடிக்கொன்டே வந்தது.
சுப்புணி மகளை நினைத்து கொண்டான். பாவம் தாயில்லா பெண். துணைக்குக் கூட ஆளின்றி தனியாக ஆஸ்பத்திரியில் இருக்கா. எப்ப ஆகுமோ? எப்படி ஆகுமோ? ஆண்டவனே நீயே கதி.
படபடவென பட்டாசு ஒலி அதிர வைத்தது, ஜெண்டை மேளமும் , கொம்புகள் எக்காள ஒலியும் உச்சகட்டத்தை எட்டின. திடிரென்று தேர் சக்கரம் பள்ளத்தில் புரண்டு நிலை தடுமாறியது. சுப்புணி திடுக்கிட்டான். கட்டை போட்டும் எதுவும் எடுபடவில்லை. வேகம் தணியவில்லை. தேர் ஒருபுறம் சாயத் தொடங்கியது.
கணநேரத்தில் சுப்புணி தேர்முன் பாய்ந்தான். 'சதக்' என்ற ஒலி . நசநசப்புடன் தேர் சுதாரித்தபடி சரியானது. தேர் நின்றது.
அரசு ஆஸ்பத்திரியின் அமைதியை கிழித்தபடி அப்பொழுதுதான் ஜனித்த ஆண் குழந்தையின் 'குவா குவா' சத்தம் காற்றில் மிதந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக