ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!).
முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம்.
ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம்.
முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தாண்டி ஒரு கவிதை எழுதி ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என தீர்மானித்துக் கொண்டால் எல்லோரும் மானசீகமாய் வாழ்த்துவார்கள்.
மற்றதெல்லாம் பிரச்சனையில்லை, எழுதுவதுதான் உரைநடை போல் வந்து விடுகிறது என்பவர்களுக்கு, என்னுடைய அடுத்த பதிவான ‘கதை எழுதுவது எப்படி’-க்காக காத்திருக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக