Photo by Benjamin Davies on Unsplash
'அச்சமே மரணம்' என்பார் விவேகானந்தர். 'அச்சமில்லை, அச்சமில்லை' என்று முழங்கினார் பாரதி. அச்சமே கீழ்களது ஆசாரம் என்று குறள் கூறும். அஞ்சி அஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே! என்று மனம் நொந்தான் பாரதி.
அச்சம் எனப்படும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது. நாமாக விரும்பி ஏற்பதல்ல இது. சிறுவயது முதலே பெற்றோராலும், மற்றோராலும் நமக்குக் கற்பிக்கப்படுவது.
பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம். அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட வெளிப்பாடு ஆகும். இது தப்பித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற நடத்தைகளை ஒத்துள்ளது.
பயத்தின் மூலகாரணம் அறியாமையே. கருக்கிருட்டில் காலில் இடறியது கயிறா அல்லது பாம்பா என்று தெரியாமல் பாம்பாக இருக்குமோ என்று ஐயம் வந்தவுடன் பயம் மனதில் அப்பிக்கொள்கிறது. கடி, விஷம், வாயில் நுரை தள்ளல், மரணம் என்று அடுக்கடுக்காக கற்பனை விரிந்து நம்மை செயலிழக்க வைக்கிறது.
ஆனால் காலில் இடறியது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை வெளிச்சத்தில் பார்த்துத் தெளிந்தவுடன் அத்தனை பயமும் வடிந்து விடுகின்றது. புலியடித்து செத்தவர்களைக் காட்டிலும் கிலிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகம் இல்லையா?
ஆக பயம் என்பது வெளியில் எங்கும் இல்லை. நம் உள்ளிலிருந்து தான் உருவாகிறது.
தெரிந்த அபாயத்தில் பயம் வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. எதுவும் நடக்கலாம். ஆனால் நம் மனமோ எதிர்மறை சிந்தனைகளால் சிக்குண்டு வரவிருக்கும் அபாயம் பற்றியே எண்ணுகிறது. அச்சம் கொள்கிறது.
எதைக்கண்டுதான் நாம் பயப்படுவதில்லை? நீரைக் கண்டு பயம், நெருப்பைக் கண்டு பயம், விலங்கு பயம், தனிமை பயம், மேடை பயம், திருடர் பயம், போலீஸ் பயம், வறுமை பயம், நோய் பயம், மரண பயம் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
பயம் நம்மை முடக்கிப் போடுகிறது. முயற்சி செய்வதை தவிர்க்கப் பார்க்கிறது. தோல்வி வருமோ என்று நினைத்து தயக்கம் கொள்ளச் செய்கிறது. தோல்வியை ஒரு பெரும் இழப்பாகக் கருத வைக்கிறது.
பயம் நம்மை உறைய வைக்கிறது. சிந்திக்க விடாமல் செயலற்றுப் போக வைக்கிறது. தேங்கிப் போய் அழுகும்படி செய்கிறது.
பயப்படுவதை பழக்கமாக ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கை சோகமயமானதாகவே இருக்கும். - எட்வர்ட். ஹெச். ஹாரிமன்
அச்சம் மறைமுகமான சம்மதம். எதையாவது கண்டு அஞ்சுகிறாய் என்றால் அது நடப்பதற்கு நீ சம்மதிக்கிறாய் என்று அர்த்தம். அது தான் அதன் கையை வலுப்படுத்துகிறது. அடி மனதின் சம்மதம் என்று அதைக் கூறலாம் - அன்னை
பயத்தைப் போக்க சரியான வழி அதைத் துணிவுடன் எதிர் கொள்வதே. அச்சம் தருவதைக் கண்டு அஞ்சி ஓடாமல் அதை நெருங்கிச் செல்வதன் மூலமே அச்சத்தை வெல்ல முடியும். - ஜே. கே.
எதைச் செய்யப் பயப்படுகிறீர்களோ அதையே திருப்பி திருப்பி செய்வது தான் அச்சத்தை ஒழிக்கும் வழி - அன்னல் காந்தியார்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, செய்து பார்ப்பது, உடனடியாக செயலில் இறங்குவது போன்றவைகள் தாம் நம் பயத்தைத் தகர்க்கும் வழி முறைகளாகும்.
மாவீரன் சிவாஜி, வீர அலெக்ஸாண்டர், நெப்போலியன், நெல்சன், ஜான்சி ராணி லட்சிமிபாய், பகத் சிங் போன்றோர்களின் வீரஞ்செறிந்த வரலாறுகளை படித்தாலே அச்சவுணர்வு அலறியோடிடும்.
எதிலும் மிதமாக இருங்கள். பேராசை வேண்டாம். அதிகம் எதிர் பார்க்க வேண்டாம். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு அலைய வேண்டாம். பொறுப்புக்களை பிறருக்கும் பகிர்ந்து கொடுங்கள். எதையும் முன் யோசனையுடன் திட்டமிட்டு செய்யப் பழகுங்கள்.
தன்னம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வையுங்கள். உடனடி செயலில் இறங்குங்கள்.
பயமின்றி வாழுங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக