Image by analogicus from Pixabay
"கஞ்ச பாளையம் ரயில் கேட் கிட்ட பொணம் ஒன்னு கிடக்காம் ."
யாரு?
"தெரியலே. வயசான பெருசாம் ."
முத்துவுக்கு வயிற்றில் ஐஸ்கத்தி செருகினாப் போல். காரமாய் அமிலம் சுரந்தது. உடனே கழிப்பறைக்குப் போக வேண்டும் போல் சங்கடம்.
அரக்கு சிவப்பாய் உறைந்தோடிய இரத்தம். நசுங்கிய தலை. விழிகள் நிலைகுத்தியபடி 'இப்ப என்னடா செய்வ' என்று கேட்டது. சிதறிய முண்டம் முட் செடியில் சுருணை போல் தொங்கிக் கிடந்தது.
கற்பனை அவனை மிகவும் இம்சித்தது. கடவுளே! அவராக இருக்க கூடாது. "முருகா முருகா". உதடுகள் நடுங்கின. தனது மொபட்டை உதைத்து முறுக்கினான்.
காலையில் பல் துலக்கும் போதே அப்பாவின் செருப்பு இருக்குமிடம் வெறுமையாக கிடந்ததை கவனித்தான். வாக்கிங் போயிருப்பாரோ? திரும்பும் போது மாரி முத்து டீ கடையில் புகைத்தபடி தினத்தந்தி படித்து விட்டு ஏழரைக்கெல்லாம் வந்துடுவாரே. என்ன ஆச்சு ?
"அப்பா எங்கே? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா ?"
"நானென்ன கண்டேன் , நேத்திலிருந்து கோவமாத் தான் இருக்காரு, சரியா சோறு தின்னறதில்ல. என்ன எழவோ."
சிவகாமிக்கு விவரம் பத்தாது. படிப்பும் கம்மிதா. சின்ன மருமக வந்ததிலிருந்து இவ டம்மியாயிட்டா. மூட்டை துணி, மோழிப் பாத்திரம், சமைப்பது, பெருக்குவது என்று எல்லாம் அவள் தலையில் விழுந்தது.
நேற்று பெரியவர் டீ தண்ணிக்கு ஆலாய் பறந்திருக்கார். சிவகாமிக்கு என்ன கடுப்போ. "போய்யா, சின்னவள டீ வச்சு கொடுக்க சொல்லு. சும்மா நொய் நொய்ன்னு மனுசி உயிரை வாங்கற" என்று பொங்கி விட்டாள்.
கோவிச்சுட்டு வயசான காலத்துல எங்க தான் போனாரு? ஒரு வேளை..அவனுக்கு 'குப்' என்று வியர்த்தது. நெஞ்சு படபடத்தது. அது அவரா இருக்கக் கூடாது. பழனி முருகா நீ தான் காப்பாத்தனம். உனக்கு காவடி எடுக்கிறேன்.
வழியில் சிறுவன் வண்டியை மறிச்சான். "அண்ணா இந்த பக்கம் வண்டி போகாது. போலீஸ்காரங்க தண்டவாளம் பக்கம் நிக்கறாங்க. எவனோ பிச்சைக்காரன் அடிபட்டு கிடக்கான்" என்றான்.
முத்துவுக்கு முதுகுத் தண்டு சிலிர்த்தது. அப்பா என்ன ஆனார்? அடுத்த விசாரம் அவனை தொத்தியது. போலீசுக்குப் போவதா? எங்கே போய் தேடுவது? பாழாப் போன பெருசு இப்படி செஞ்சுட்டதே. உடல் தளர்ந்து வாய் உலர்ந்து போனது. காற்றில் மிதப்பது போல் இயந்திரமாய் வீடு வந்ததே தெரியவில்லை.
வீட்டின் முன்னே அப்பாவின் செருப்பு அவனை வரவேற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக