ஒரு பெருமழையின் கடைசித்துளியை
மண் உறிஞ்சிக் கொண்டதுபோல்
உன் இறுதித் தருணங்கள்
பிரபஞ்சத்தில் கரைந்திருக்கக் கூடும்
ஒரு நூற்றாண்டின் சோர்வை
அந்நாட்களில் கரைத்திருப்பாய்
பெருவலியின் அடர்த்தியைக் கடத்திய
கண்களின் கூர்மை
என் எஞ்சிய வருடங்களைத்
துளையிட்டுச் செல்கிறது
நாம் சேமித்துக்கொண்ட
பேசப்படாத சொற்களைக் கொண்டு
துன்பம் தோயும்
ஒரு கவிதையை எழுத முயல்கிறேன்
ஓயாத அலைகளாய்
துரத்தும் உன் நினைவுகளில்
நனையாவண்ணம் நிற்கிறேன் எனினும்,
பாதத்தில் கரைந்தோடுகிறது மணல்
நீண்ட இடைவெளிக்குப்பின் நாம்
கைகோர்த்துக்கொண்டதும்; நீ
என் மடி சாய்ந்து கொண்டதும்
தீ கொண்ட உன் நினைவடுக்கில்
புதைந்திருக்கிறதா இன்னும்?
நம் சந்திப்பு
எப்பொழுதேனும் நிகழக்கூடும்
மீண்டுமொருமுறை;
அம்முறையேனும் நீண்டதொரு காலம்
கூடியிருப்போம் அப்பா!
கருத்துகள்
கருத்துரையிடுக