பல்லவி: கலங்காதே மனமே, சிறு பிரிவினில் மீளும் உறவுகள் நீளும்
தனிமையின் நிழலில் உயிர் துணையினில் கொண்ட கசப்புகள் வீழும்
இசையான வாழ்வில் நிலையான விரிசல்கள் தங்குவதேது
கண்ணிலே வலியுணர்ந்து அவளினும் உனை மடியினில் தாங்குவதேது
சரணம் 1:
நீர் வழியும் உன் கண்கள் பார்த்திடவோ அவள் பொறுத்திடுவாள்?
ஓருயிராய் உனைப் பொதிந்து தன் திருமனதில் நிறுத்திடுவாள்...
நீயன்றி தாயொன்று வாய்த்திடுமா என்றஞ்சும்,
பூவென்றும் புயலென்றும், பெண்மை வெல்லும் உன் அன்பில் துஞ்சும்
விதியினில் வீழுமோ வாழ்வே, இனியில்லை புரிதலில் வீழ்வே
தன்முனைதல் இல்லா உறவின் தூதை விருத்தம் செய்யும்
காற்றின் மொழியே...
சரணம் 2:
பால் பொழியும் நிலவிருந்தும் பாலையாய் மனம் எரிவதென்ன
ஆல் விரிக்கும் விழுதினைப் போல் தாங்கலுக்குத் தவிப்பதென்ன
விடைதேடும் உன்தேடல் முடிவன்றோ அவள் தோற்றம்
புதிராடும் சதிராடும், விடை சொல்லும் உந்தன் வாழ்க்கைத் தேற்றம்
பிரான்மலைத் தேரின் கொடியே, பிறிதில்லை இனியொரு கொடிதே
நல்வாழ்வின் வாழ்த்தைப் பாடும் இச்சிறு பாணன்யாழின்
காற்றின் மொழியே...
கருத்துகள்
கருத்துரையிடுக